பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சுப்பிரமணியன் உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாக்கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சுப்பிரமணியன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சுப்பிரமணியன் உடல் அங்கிருந்து சாலை மார்கமாக தூத்தூக்க்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் சுப்பிரமணியன் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சவலாப்பேரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பலர் சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவலப்பேரி கிராமத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதிஉதவியை துணை முதல்வர் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் சுப்பிரமணியனின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.