ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவரும், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான புகழேந்தி, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு தீர்ப்பு வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
''ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் ஒரு வாரம் நன்கு விசாரித்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசியல் வாரிசான ஓபிஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வரும். நினைக்கும் போதெல்லாம் இபிஎஸ் அணி கறுப்பு சட்டை அணிந்து சட்டப் பேரவை செல்கின்றனர்.
பேரவையை பொறுத்தவரை, பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும். இம்முறை ஆளுநரே அதை செய்தது அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநர் திராவிட தலைவர்கள் பெயரையே உச்சரிக்க தவிர்த்து அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டார்.
கர்நாடகாவில், அம்மாநில மக்களேவும் தாய்மொழியை விட இந்திதான் அதிகம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தான் குடியேறுபவர்களும் தமிழ் பேசுகின்றனர். கோவையில் கோடநாடு வழக்கில் அப்போத்திருந்த டிசிபி கோட்டை விட்டுவிட்டதால் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோடநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசிய போது இபிஎஸ் ஏன் பதுங்கி சென்றார்? அங்கிருந்தே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா? முதல்வர் கோடநாடு வழக்கை விரைந்து முடித்து தீர்வு கொண்டு வர வேண்டும். கோவைக்கு விரைவில் ஒபிஎஸ் வருவார்
எடப்பாடி பழனிசாமிக்கு அணியை பொறுத்தவரை, எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை விட புத்திசாலி! இபிஎஸூக்கு பதிலாக வேலுமணியை அந்த அணியை வழிநடத்த விட்டால், அவர்கள் பிழைப்பார்கள். வேலுமணி, தங்கமணி வளர்ந்துது ஜெயலலிதாவால் தான். பிரதமர் மோடி 2,000 நோட்டு மீண்டும் செல்லாது என அறிவித்தால் இவர்கள் புதைத்து வைத்த பணம் எல்லாம் வெளிவந்து விடும்.
சசிகலா காலில் விழாதவர்கள் அவர்களை பற்றி பேசுங்கள். பணம் கையில் இருக்கிறது என்று ஆடுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் 12,000 பதவிகளை நீங்களே வைத்து சுரண்டிணீர்களே. ஆனால் திமுக நடத்தி காட்டியது அல்லவா? திமுக ஆளுநரை எதிர்க்கட்சி போல நடத்துவதை விட்டுவிட்டு, பிரச்னையை முடிக்க வேண்டும். ஆளுநர்கள் கூட அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது நடுங்கி இருந்தார்கள்.
கூட்டணி தொடர்பாக பேச்சு வரும் போது யாரும் இபிஎஸ்-ஐ நம்ப மாட்டார்கள். ஓபிஎஸ் எப்போதும் இணைப்புக்கு தயார். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஒற்றுமைக்கே வழி வகுப்போம். பிரிவினையை யாரும் விரும்ப மாட்டார்கள். இபிஎஸ் தரப்பில் செய்தி தொடர்பாளர்களை தைரியமாக அனுப்ப கோருஙகள் பார்க்கலாம். லோக்சபா தேர்தளுக்காக இரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக பரவும் தகவல் பொய். அம்மாவுக்கு பிணை கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே போதும். `பதவிகள் ஏதும் எனக்கு தேவை இல்லை. அதிமுக சேர வேண்டும்’ என ஒபிஎஸ் நினைக்கிறார் என்பதன் காரணமாக தான் அவருடன் உள்ளேன்'' என்று புகழேந்தி கூறினார்.