அத்தகைய ஆயுதத்தை ஏந்தி தங்களின் தலையெழுத்தை மாற்றப் புறப்பட்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடி பெண்கள்... இதற்காக ஊரே கூடி அம்மாணவிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
வாத்திய முழக்கங்கள், ஊர்வலம் என இங்கு மகிழ்ச்சியின் ஒலி ஓங்கி ஒலிக்கிறது.. இரண்டு மாணவிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இவர்களை ஊரே கொண்டாடுவதைக் கண்டு பெற்றெடுத்த தாய்மார்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு காரணத்தை அறியவேண்டுமானால், புதுக்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் சிப்காட் அருகே உள்ள காமராஜ் நகரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் இந்து ஆதியன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 76 குடும்பங்கள், வாழ்ந்து வருகின்றன. இந்த பழங்குடி சமூகத்தில் பெண் குழந்தைகளில் யாரும் பத்தாம் வகுப்பை தாண்டியதில்லை. இவர்களின் உயர்கல்விக்குத் தடையாக சாதிச்சான்றிதழ் இருந்த நிலையில், எய்டு இந்தியா முயற்சியோடு லட்சுமி, தமிழ்ச்செல்வி இருவரும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆண்களில் தமிழரசன் என்ற ஒரு மாணவர் மட்டும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியோடு எம்ஏ படித்து வருகிறார். கல்வி குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் இல்லாததால் இந்த ஊர் மக்களின் கல்வி கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
இதனால், தங்கள் சமூகத்திலிருந்து முதன் முதலாக இரண்டு பெண்கள் பத்தாம் வகுப்பை கடந்து கல்லூரிக்கு படிக்க செல்வது அந்த கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது. தங்கள் சமூகத்தில் இருந்து தனி ஒருவனாக மேற்படிப்பு படிக்கும் தமிழரசன், இப்போது தனது சகோதரி உள்பட இரு பெண்கள் படிப்பதால் இனி மாற்றங்கள் சாத்தியமாகும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி குறித்த விழிப்புணர்வு கூட இந்த கிராம மக்களுக்கு இல்லாத நிலையில் இந்திய வளர்ச்சிக் கழகத்தின் எய்டு இந்தியா அமைப்பைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ராஜா மற்றும் பிச்சம்மாள் இருவரும் இக்கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விளைவு... இப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 குழந்தைகள், அருகே உள்ள அரசு பள்ளிகளில் ஆரம்ப கல்வியை படித்து வருகின்றனர்.
படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் படிக்க முடியாததால் பத்தாம் வகுப்புக்குள்ளாகவே திருமணம் செய்து வைப்பதும் இந்த சமூகத்தில் அதிகம் நடக்கிறது. கல்வி தனிநபருக்கான மாற்றத்தை மட்டுமல்ல, சமூக மாற்றத்துக்கும் வித்திடுகிறது. கல்விதான் மிகச்சிறந்த ஆயுதம்.
கல்விதான் களவாட முடியாத சொத்து.. கல்வியே ஒரு சமூகத்தை முன்னேற்றுவதற்கான படிக்கல்.. அந்த முன்னேற்றத்தின் நம்பிக்கை கீற்றுகள் புதுக்கோட்டை காமராஜ் நகரில் தென்படத் தொடங்கியிருக்கிறது. இதனை மேலும் பிரகாசிக்க வைப்பது அரசின் கைகளில் இருக்கிறது.