பயணியர் நிழற்குடையில் வசித்துவந்த மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!

பயணியர் நிழற்குடையில் வசித்துவந்த மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!
பயணியர் நிழற்குடையில் வசித்துவந்த மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே ஆதரவற்ற நிலையில் பயணியர் நிழற்குடையில் வசித்துவந்த 100 வயதை கடந்த மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் நேசத்தோடு உதவிக்கரம் நீட்டியுள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள லெக்கணாப்படி ஊராட்சிக்குட்பட்ட பாதிப்பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி வருகை தந்தார். அப்போது அந்த கிராமத்தை சிறிதுநேரம் அவர் சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள பயணியர் நிழற்குடையில் மூதாட்டி ஒருவர் பரிதாபமான நிலையில் படுத்திருப்பதை கண்டார்.


இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி விசாரித்தபோது, அந்த மூதாட்டியின் பெயர் பச்சையம்மாள் என்றும் அவர் 100 வயதை கடந்தவர் என்றும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வயதான தனது கணவரோடு அவர் இந்த கிராமத்திற்கு வந்ததாகவும், குழந்தை இல்லாமல் முதுமையின் சுமையோடு வந்த அவர்களுக்கு தங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு குடிசை அமைத்து கொடுத்து அங்கு தங்க வைத்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூதாட்டியின் கணவர் இறந்துவிட தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் குடிசை கஜா புயலின் போது மரம் விழுந்து சேதம் அடைந்து விட்டது. அதன்பின்பு இந்த பயணியர் நிழற்குடையில் தஞ்சமடைந்த மூதாட்டி, அங்கேயே வாழ்வை நகர்த்தி வருவதாகவும் அவருக்கு தேவையான உணவு உள்ளிட்ட சில உதவிகளை அப்பகுதி மக்கள் வழங்கி வருவதாகவும் கூறினார்.

இதனைக் கேட்டு மனம் உறைந்துபோன மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உடனடியாக அந்த நூறு வயதை கடந்த மூதாட்டியின் அருகில் சென்று ஆறுதலான வார்த்தைகள் கூறி அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார். 

இருந்தபோதிலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்த ஆட்சியர் உமா மகேஸ்வரி உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அலைபேசியில் அழைத்து அந்த மூதாட்டியை மீட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்வதோடு அவரை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டார். இதனால் மகிழ்ச்சியடைந்த அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

தற்போது சமூகநலத் துறையினர், மற்றும் வருவாய் துறையினர், அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு அவரை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com