“அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது தமிழகம்தான்”- மா.சுப்பிரமணியன்

“அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது தமிழகம்தான்”- மா.சுப்பிரமணியன்
“அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது தமிழகம்தான்”- மா.சுப்பிரமணியன்
Published on

“தமிழகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அதிக அளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது” என புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்:

“பேரிடர் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக சுகாதாரத் துறையில் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளேன். அவர்கள் விவரங்களை சமர்ப்பித்தவுடன், இந்த நிதிநிலை அறிக்கையில் எவையெல்லாம் முக்கியமான தேவையோ அவையாவும் செயல்படுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர் இதனால் பயனடைந்துள்ளனர், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆயிரம் மெட்ரிக்டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மூன்றாவது அலை வந்தால் அதனை தடுக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 98 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,

இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மட்டுமன்றி, தமிழகத்தில் அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டையே திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 60% கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 18 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை. அதே வேளையில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் செப்டம்பர் மாத தொடக்கத்தில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com