திருச்சியில் கலெக்டர் பி.ஏ கொலை வழக்கில் தகாத உறவுதான் காரணம் என்றும் மேலும் பல திடுக் தகவல்களும் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை கலெக்டரின் பி.ஏவாக பணிபுரிந்து வந்தவர் பூபதி கண்ணன். இவர் மனைவி அனுராதா. பூபதி கண்ணன் திருச்சியில் இருந்து காரில் புதுக்கோட்டை கலெக்டர் ஆபீஸுக்கு தினமும் சென்று வருவது வழக்கம். கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல காரில் புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாத்தூர் அருகே சரமாரியாக வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது காரில் இருந்து மதுப்பாட்டில்களையும், பெண்ணின் உள்ளாடையையும் பறிமுதல் செய்தனர். பூபதி கண்ணனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், அவர் ஒரு பெண்ணுடன் நீண்ட நேரம் பேசி இருப்பதை கண்டறிந்தனர். அந்த பெண் அவருடன் புதுக்கோட்டை கலெக்டர் ஆபிசில் பணி புரியும் சவுந்தர்யா என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல திடுக் தகவல்கள் வெளியாயின.
சவுந்தர்யா, லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்தவர். இவர் கணவர் சுரேஷ் குளித்தலையில் வேளாண்மை துறையில் பணியாற்றி வந்தார். சவுந்தர்யா திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அது தொடர்ந்துள்ளது. விஷயம் சுரேஷூக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் பிரச்சினை. இதில் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவுக்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.
இதையடுத்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். முன்னாள் காதலன் அவருக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்துள்ளார். சவுந்தர்யாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில்தான் சவுந்தர்யாவுக்கு பூபதி கண்ண னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் பின் நெருக்கமானது.
பூபதி கண்ணன், தினமும் புதுக்கோட்டைக்கு காரில் செல்லும்போது, சவுந்தர்யாவையும் அழைத்து சென்றார். இது சவுந்தர்யாவின் பழைய காதலனுக்கு தெரிய வந்ததும் கொதித்தார். அவர் பூபதி கண்ணனை எச்சரித்தார். அதையும் மீறி காதலைத் தொடர்ந்தார் சவுந்தர்யா. ஒரே நேரத்தில் அவர் இரண்டு பேரிடமும் பழகி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 27 ஆம் தேதி இருவரும் காரில் செல்வதைத் தெரிந்துகொண்ட சவுந்தர்யாவின் காதலன், கூலிப்படை மூலம் பூபதி கண்ணனை தீர்த்துக் கட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த கொலையில் சவுந்தர்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் உண்மையைச் சொன்னால் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.