“ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” புதுக்கோட்டையில் செல்போன் டவர் மீது ஏறி போராடிய முதியவர்

“ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” புதுக்கோட்டையில் செல்போன் டவர் மீது ஏறி போராடிய முதியவர்

“ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” புதுக்கோட்டையில் செல்போன் டவர் மீது ஏறி போராடிய முதியவர்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி 63 வயது முதியவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த கொடும்பாளுர் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது முதியவர் செல்வராஜ். சமூக ஆர்வலரான இவர், அந்த பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றச் சென்றபோது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி எங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டதை அடுத்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் இதற்கு தடையானை பெற்று விட்டதால் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சமூக ஆர்வலர் செல்வராஜ் இன்று கொடும்பாளுர் பகுதியில் உள்ள 150அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள செல்போன் கோபுரம் என்பதால் அங்கு பொதுமக்கள் பலரும் திரண்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும். ஆகவே செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வாருங்கள் என்று கூறினர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதியவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். இதையடுத்து முதியவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முதியவர் ஒருவர் 150அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com