செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் நமுணசமுத்திரம் அருகே உள்ள இளங்குடிப்படி கிராமத்தில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று மாலை முதல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையும் கார் அதே இடத்தில் நின்றதால் சந்தேகமடைந்த மடத்து காவலாளி அடைக்கலம் என்பவர் கார் கண்ணாடிக்குள் பார்த்துள்ளார். அப்போது ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உடல் அசைவின்றி இருந்துள்ளனர்.
இதையடுத்து காவலாளி அடைக்கலம், இதுகுறித்து நமுன சமுத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை மீட்டு காரை ஆய்வு செய்தனர். அப்போது ஐந்து பேரும் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், விபரீத முடிவெடுத்த நபர்கள் சேலம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி நித்யா மகன் தீரன், மகள் நிகரிகா, தாயார் சரோஜா என்பது தெரியவந்தது. கடன் பிரச்னை காரணமாக தாங்கள் அனைவரும் விபரீத முடிவெடுத்துள்ளதாகவும், தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தாங்கள் இறந்த பிறகு தங்களது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்த காவல்துறையினர் ஐந்து பேரின் சடலத்தையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.