கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்புகூட தேர்ச்சி பெறாத நபர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் புகார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 21 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு சொக்கனகள்ளி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லி புதூரில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் போலி சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்றதாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு குண்டலபட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜேந்திரன் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்பதும் அதேபோல் எந்தப் பள்ளியிலும் படிக்காமல் ஊர் சுற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பணம் கொடுத்து பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை போலியாக பெற்று பணியில் சேர்ந்ததும், 21ஆண்டுகளாக அரசாங்கத்திடம் ஏமாற்றி சம்பளம் பெற்று வந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜேந்திரன் போலியான சான்றிதழ் அளித்ததின் நகல்கள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் ஆதாரத்துடன் சமர்பித்துள்ளார்.