திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வுக்குச் சென்ற சிறப்பு ரயிலை வழிமறித்து பொதுமக்கள் மனு கொடுக்கச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
கத்திக்காரன்பட்டி ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மணப்பாறை, சின்னசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி ஆபத்தை விளைவிக்கும் விதமாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், சுரங்கபாதை அமைப்பதை தவிர்த்து மேம்பாலம் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டதால் அப்பகுதி மக்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் சென்ற சிறப்பு ரயிலை வழிமறிக்க முயன்றனர். தகவலறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவில்லை என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.