சென்னை அருகே மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை குளத்தில் இன்று நடைபெற்ற தீர்த்தவாரியின்போது தண்ணீரில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் பகுதியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் தற்போது பங்குனி மாத விழா நடைபெற்று வருகிறது. இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி அருகில் உள்ள மூவரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அர்ச்சகர்கள் 30 பேர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
யாருக்கும் நீச்சல் தெரியாததால் நிகழ்ந்த சோகம்!
காலை 9 மணி அளவில் 25 பேர் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி பூஜையில் ஈடுபட்டனர். அப்போது ஆழமான பகுதியில் சென்ற மூன்று பேர் தண்ணீரில் மூழ்கினர். இவர்களை காப்பாற்ற முயன்ற மேலும் இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கினர். அப்போது அங்கிருந்தவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியவர்களை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கியவர்களை தேட முயன்றனர். ஆனால் மிகவும் ஆழமான குளம் என்பதால் அவர்களை மீட்க முடியவில்லை.
இது குறித்து தகவலறிந்து வேளச்சேரி, கிண்டி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி குளத்தில் மூழ்கிய 5 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குளத்தில் இறங்கி பூஜை செய்தவர்கள் நீச்சல் தெரியாதவர்கள் என்றும், குளம் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதது என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
தீர்த்தவாரி நடைபெற்ற குளத்தில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. குறிப்பாக குளத்தில் அர்ச்சகர்கள் இறங்கி பூஜை செய்யும் இடத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் கட்டப்படவில்லை. அப்படி கட்டப்பட்டிருந்தால் ஆழமான பகுதிக்கு அர்ச்சர்கள் சென்று இருக்க மாட்டார்கள். நீர் நிலைகளில் பூஜை நடைபெறும் பொழுது அங்கு அதிகமான கூட்டம் கூட வாய்ப்பு இருக்கும். இந்நிலையில், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு தீயணைப்புத்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம்.
மேலும் அந்த குளம் 3 அடுக்குகளைக் கொண்டது என்றும், கரையோரத்தில் இடுப்பளவில் தண்ணீர் இருந்ததாகவும், உள்நோக்கி செல்லும் பொழுது 25 அடி ஆழம் ஒரு அடுக்கிலும் பின்னர் 40 அடி ஆழம் கொண்டதாகவும் இருக்கும். இதனை அறியாமல் ஆழமான இடத்துக்கு சென்றபோது துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழப்பு நிகழ்ந்த குளம் அமைந்துள்ள பகுதியில் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவில் தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அந்த குளத்தை பார்வையிடட வரும் பொதுமக்கள் குளத்துக்குள் இறங்காமல் இருக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.