கன்னியாகுமரியில் மேல்நிலைபள்ளிக்குள் புகுந்து மாணவிகள் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், இன்று காலை புகுந்த ஜெயன் என்ற அரசுப்பேருந்து ஓட்டுநர், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை உடைத்து சேதப்படுத்தினார். அத்துடன் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த அவர், 12ஆம் வகுப்புக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவிகள் இருவரை அரிவாளால் வெட்டினார்.
இதனை தடுக்க முயன்ற பள்ளி ஊழியர் ஒருவரை வெட்டிவிட்டு அவர் தப்பி ஓடினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஜெயனை பிடித்து, அருமனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் முன், அதேபகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை ரப்பர் பால் வெட்டும் கத்தியால் ஜெயன் குத்தியது தெரியவந்தது. ஜெயனால் படுகாயமடைந்த 4 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஜெயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.