ஊர்த்தலைவருடன் சேர்ந்து மக்களே அமைத்த ஆற்றுப்பாலம்

ஊர்த்தலைவருடன் சேர்ந்து மக்களே அமைத்த ஆற்றுப்பாலம்
ஊர்த்தலைவருடன் சேர்ந்து மக்களே அமைத்த ஆற்றுப்பாலம்
Published on

ஈரோடு அருகே மாயாற்றின் குறுக்கே ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சொந்த செலவில் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா என்ற வன கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு பவானிசாகரில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 25 கிலோ மீட்டர் கரடு முரடான பாதைகளில் பயணித்து, பின்னர் வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும். அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுவதால், இந்த கிராம மக்கள் மாயாற்றை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித்தலைவர் சுகுணா மனோகரன், ஊர்மக்களுடன் இணைந்து தற்காலிக நடைபாலம் அமைக்க திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து அங்குள்ள பரிசல் துறையில் ஆற்றின் குறுக்கே கற்கள் அடுக்கப்பட்டு, தண்ணீர் செல்ல ஏதுவாக சிமெண்ட் குழாய்களுடன் தற்காலிக நடைபாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து பாலம் தயாராக உள்ளது. இதன்மூலம் தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்வோர், பரிசல் இயக்குபவர்களை எதிர்பார்க்காமல் தற்காலிக பாலம் வழியே எளிதாக நடந்து செல்ல முடியும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு ரூ.3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக நடைபாலம், மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. எனினும், மழைக் காலத்திற்கு ஆறு மாத காலம் வரை உள்ளதால் அதுவரை இந்த பாலத்தின் வழியாக மக்கள் எளிதாக ஆற்றைக் கடக்க முடியுமென உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com