சென்னை புறநகர் ரயில்களில் இன்றுமுதல் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில், வழக்கமான ரயில்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து நிறுவனங்களும், அலுவலகங்களும் செயல்பட தொடங்கியதை அடுத்து, ரயில்வே ஊழியர்கள், வங்கி, காப்பீடு, பொதுத் துறைநிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் இன்றுமுதல் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ’NON PEAK HOURS’ எனப்படும் கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் மட்டும் அனைத்து பயணிகளும் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரம் தவிர்த்து, மற்ற நேரத்தில் புறநகர் ரயில் சேவையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் பயணிகள் அனைவரும் ஒருவழி டிக்கெட் மட்டுமே கவுன்ட்டர்களில் பெற முடியும் என்றும், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.