மதுரை மாவட்டம் ஆனையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் ரித்யுஷா என்ற மாணவி, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றிருந்தார். மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மை நிலையில் இருந்த அம்மாணவியின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அவற்றைக்கண்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அம்மாணவியையும், அவரது பெற்றோரையும் தன் வீட்டிற்கு வரவழைத்து பாராட்டினார்.
அப்போது அந்த மாணவியிடம் ‘அடுத்த என்ன படிக்க போகிறாய்?’ என்று அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு மாணவி “எனக்கு கல்லூரி சென்று படிக்கப் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் மூலம் டிகிரி படிக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார். உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன், மதுரை லேடி டோக் கல்லூரி முதல்வரிடம் பேசி, மாணவி விரும்பும் துறையில் இடம் தர வேண்டும் எனவும் ரித்யுஷாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
லேடி டோக் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை ஏற்கெனவே முடிந்துவிட்ட போதிலும், அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மாணவி ரித்யுஷாவுக்கு அக்கல்லூரியில் பி.காம் துறையில் படிக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கான கல்விக் கட்டணத்தை மாணவியிடமே அமைச்சர் பிடிஆர் வழங்கினார்.
தான் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்பில் இடம் பெற்றுத்தந்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்திய அமைச்சருக்கு மாணவி ரித்யுஷா தற்போது நேரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தான் பி.காம் முடித்துவிட்டு ஐ.ஐ.எம்.-இல் எம்.பி.ஏ. பயில விரும்புவதாகவும் கூறி இருக்கிறாராம். இதை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.