பெரம்பலூரில் பெட்டிக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டதற்கு, அவர் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்தகம் தவிர, மளிகை கடைகள் உள்ளிட்டவற்றிற்கும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள நக்கசேலம் கிராமத்தில் வருவாய்த்துறையினர் ரோந்து சென்றபோது, மாற்றுத்திறானாளி சக்திவேல் என்பவரின் பெட்டிக்கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து திறந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்து சென்றதாக தெரிகிறது. இச்சம்பவம் நடந்தபோது கடையில் இருந்த சக்திவேலின் தந்தை கண்ணையன் என்பவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணையன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணையனின் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வருவாய்த்துறையினரோ கண்ணையன் குடும்பப் பிரச்சனை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என விளக்கமளிக்கப்பதாக என்று சொல்லப்படுகிறது.