'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
அவர் தனது உரையில், தமிழ்நாடு ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வேலை தேடி இடம் பெயரும் ஏழைக் குடும்பங்கள் ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, இந்தத்திட்டம் பயனளிக்கும்.
கொரோனா நிவாரண நடவடிக்கைக்காக கூடுதலாக 19.95 லட்சம் மெட்ரிக் டன் விலையில்லா அரிசி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை, மாநிலத்தில் உள்ள அனைத்துக்குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரித்தான, பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்காக மாநில அரசு கூடுதல் மானியமாக 5,402 கோடி ரூபாய் செலவை ஏற்றுக்கொண்டது.” என்றார்