இலங்கை கடற்படையால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெறும் போராட்டம் முடிவுபெறவில்லை என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று வெளியுறத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து 6ஆவது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்து பேசினார். உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த நிர்மலா சீதாராமன், மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்க மறுத்த போராட்டக்குழுவினர், போராட்டம் முடிவுபெறவில்லை என்று அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் பேசிய மீனவர் சங்கத் தலைவர் எமரால்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்ல. போராட்டத்தினை வாபஸ் பெறுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். போராட்டத்தினை திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திட்டமிட்டபடி நாளை 6 மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் போராட்டக்குழுத் தலைவர் ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.