வணிகர்கள் நியாயமாக வரியை கட்டி வருகின்றனர் ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூழ்ச்சியாக செயல்பட்டு வரிஏய்ப்பு செய்து வருகின்றனர். அதனால் மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடக்கவிருக்கும் அதே தேதியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வாணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டார். அப்போது கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய அரசு புதிதாக அரிசி, கோதுமை, பால், தயிர், மாவு போன்ற பொருட்களுக்கு விதித்துள்ள வரியை முழுமையாக அகற்ற வேண்டும். இந்த வரிகள் ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பாரத பிரதமர் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் போது ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டால், அதன் பின் அனைத்து வரிகளும் நிறுத்தப்பட்டு ஒரே நாடு ஒரே வரி அமுல்படுத்தப்படும் என அறிவித்தார். ஆனால் தற்பொழுது ஜிஎஸ்டி வரி ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆகி உள்ளது. ஆகவே பாரத பிரதமர் உடனடியாக ஜிஎஸ்டி வாரிய ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், வணிகர்கள் நியாயமாக வரியை கட்டிவருகின்றனர். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூழ்ச்சியாக செயல்பட்டு வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். ரிலையன்ஸ், ஜியோ, டிமார்ட், அதானி போன்ற நிறுவனங்கள் வணிகர்களை நசுக்கக்கூடிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களை ஏமாற்றுவதற்காக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர் என்றும் மக்களை ஏமாற்றி எப்படி கவர் செய்வது என்பது தான் அவர்களது வேலை என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மத்திய அரசின் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெறும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கூட்டம் நடைபெறும் அதே தேதியில் மத்திய அரசை கண்டித்து மதுரையில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு 40 விலை பொருட்களுக்கு செஸ் வரி விதித்துள்ளது அதனை நீக்க முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.