நகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு ஆதரவளித்து காரைக்கால் மாவட்ட மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில் தொழில் உரிம வரி, தொழில் வரி, வணிக வளாக வரி, குப்பை வரி உள்ளிட்டவை திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்நிலையில் நகராட்சிக்கு மட்டும் உயர்த்தப்பட்ட வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த வணிகர் கூட்டமைப்பு இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது.
இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள பெரிய அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் அங்காடிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், கடையடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதித்துள்ளது. இன்று மட்டும் அரசுக்கு ரூ7கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.