திண்டுக்கல்: சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு சலூன் கடைகளை அடைத்து போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவர தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி கேட்டு நாமக்கல்லில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சவரத் தொழிலாளியின் மகளான 12 வயதான சிறுமியை கடந்தாண்டு அவருடைய எதிர்வீட்டு சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, மின்சாரத்தை செலுத்தி படுகொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுவன் மீதான குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டியும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1200 சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2500 சலூன் கடைகளை அடைத்ததோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்க இருப்பதாக சவரத் தொழிலாளர் சங்க திண்டுக்கல் நகர தலைவர் மருதைவீரன் தெரிவித்தார். உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.