மதுக்கடையை மூட வலியுறுத்தி திருவள்ளூரில் 2 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 76 மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சில பகுதிகளில் மதுக்கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அந்த மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சோழவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க அவர் உத்தரவிட்டார்.
இதேபோல அத்திப்பட்டு பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், காவல் துறையினரின் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.