ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு விவகாரம் - முதற்கட்ட விசாரணை நிறைவு

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு விவகாரம் - முதற்கட்ட விசாரணை நிறைவு
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு விவகாரம் - முதற்கட்ட விசாரணை நிறைவு
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது என லஞ்ச ஒழிப்பு இயக்குநர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பில் விசாரணை குறித்த, 6ஆவது அறிக்கை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. அமைச்சரிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை  மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள்தான் இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்,  வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com