உளவுத்துறை ஏடிஜிபி ஆகும் டேவிட்சன் தேவாசிர்வாதம் யார்? அவர் பின்னணி என்ன?

உளவுத்துறை ஏடிஜிபி ஆகும் டேவிட்சன் தேவாசிர்வாதம் யார்? அவர் பின்னணி என்ன?
உளவுத்துறை ஏடிஜிபி ஆகும் டேவிட்சன் தேவாசிர்வாதம் யார்? அவர் பின்னணி என்ன?
Published on

டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காவல்துறையில் மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறைக்கு அமர்த்தப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் யார்? அவர் பின்னணி என்ன? 

உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்க கூடியது. ஒரு மாநில ஆட்சியின் நல்லது, கெட்டது பற்றிய தகவல்களை முன்கூட்டியே ஆராய்ந்து அது பற்றிய தகவல்களை ஆளும் அரசுக்கு அறிக்கை அளித்து ஆட்சியை தலைநிமிரச் செய்வது உளவுத்துறையின் தலையாய பணியாகும். ஆகவே மாநில ஆட்சியின் முதுகெலும்பாக விளங்குவது உளவுத்துறை ஆகும். அந்த வகையில் தமிழக காவல்துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது.

ஆகவே அதில் பதவியில் அமர்த்தப்படும் அதிகாரிகள் மிக அனுபவம் உள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதால் அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள்தான் அங்கு நியமிக்கப்படுவார்கள். தமிழக காவல்துறை உளவுத்துறையில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் மோகன்தாஸ் மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போது அலெக்சாண்டர், வெங்கடகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோர் தனிமுத்திரை பதித்தவர்கள். அந்த வரிசையில் ஓய்வு பெற்ற ஐஜி சந்திரசேகர், வரதராஜூ மற்றும் டிஜிபி ஜாபர்சேட், ராமானுஜம் மற்றும் தற்போது பதவியில் உள்ள ஐஜி ஈஸ்வரமூர்த்தி நுண்ணறிவாற்றல் மிகுந்தவர்கள் என பெயரெடுத்தவர்கள். இவர்களை அடுத்து டேவிட்சன் தேவாசிர்வாதம் அந்த இடத்தில் உள்ளார்.

அந்த வகையில் தமிழக காவல்துறையின் உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே காலியாக இருந்த இந்த பொறுப்பை உளவுத்துறை ஐஜியான ஈஸ்வர மூர்த்தி கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அங்கு புதிய அதிகாரியை புதிய அரசு நியமித்துள்ளது.

உளவுத்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் முதலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 53 வயது நிறைந்த இவர் ஒரு எம்ஏ பட்டதாரி.

முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஏஎஸ்பி. அதன் பின்னர் கோவை ஏஎஸ்பி. அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர், கரூர், காஞ்சிபுரம் மற்றும் கியூ பிரிவு எஸ்.பி., மதுரை போக்குவரத்து துணை ஆணையர், பின்னர் டிஐஜியாக பதவி உயர்ந்து உளவுத்துறை மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராக 6 ஆண்டுகள். அதனையடுத்து ஐஜியாக பதவி உயர்ந்து காவல்துறை நலப் பிரிவு, நிர்வாகப்பிரிவு மற்றும் மீண்டும் உளவுத்துறையில் பணியாற்றினார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்ந்து காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்து தற்போது கோவை காவல் ஆணையராக உள்ளார்.

மாநில உளவுத்துறையில் எஸ்பியாகவும், டிஐஜியாகவும், ஐஜியாகவும் நீண்ட காலங்கள் பணிபுரிந்து ஆட்சியாளர்களின் குட்புக்கில் இடம் பிடித்தவர் டேவிட்சன். மதுரை காவல் ஆணையராக பணிபுரிந்த போது டேவிட்சன் அங்கு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கியூ பிரிவு எஸ்பியாக பணிபுரிந்த போது விடுதலை புலிகள் இயக்கத்தை கண்காணித்தும், மாவோயிஸ்ட் ஊடுருவல் குறித்த பணிகளை சிறப்பாக செய்தமைக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். அதேபோல் பால்ரஸ் குண்டுவெடிப்பு, தூத்துக்குடி மாவட்ட கன்னிவெடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டுக்களை பெற்றவர். காவல்துறையில் மனித நேயம் மிக்க அதே சமயத்தில் நேர்மையான அதிகாரி என போற்றப்படுவர் டேவிட்சன் என்று காவல்துறை அதிகாரிகளே பாராட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com