நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை - இந்தச் சோதனை எடுப்பது ஏன்?

நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை - இந்தச் சோதனை எடுப்பது ஏன்?
நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை - இந்தச் சோதனை எடுப்பது ஏன்?
Published on

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் நிர்மலாதேவி குரல் மாதிரி எடுக்கப்பட்டு பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

குரல் மாதிரி சோதனைக்காக நிர்மலா தேவி நேற்று மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 3 மணி நேரம் நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை நடந்தது. தடய அறிவியல் துறையில் உள்ள இயற்பியல் பிரிவின் துணை இயக்குநர் ஹேமலதா தலைமையிலான குழுவினர், நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்தினர். மாணவிகளுடன் நிர்மலா தேவி பேசியதாக கூறப்படும் பதிவில் இருந்து, சில வார்த்தைகளை மட்டும் ஒரு பேப்பரில் எழுதி, அதை நிர்மலா தேவியை பேசச் சொல்லி தடய அறிவியல் துறையினர் பதிவு செய்தனர். 

ஏற்கனவே உள்ள பதிவில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் பேசச் சொன்னால், வேறு மாதிரியாக நிர்மலா தேவி பேச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக சில வார்த்தைகளை மட்டும் பேசும்படி கூறினர். முந்தைய பதிவில் எப்படி பேசப்பட்டு இருந்ததோ, அதேபோல் நிர்மலா தேவி பேசும் வரை குரல் சோதனை நடைபெற்றது. இதன்பின்னர் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட குரலும், ஏற்கனவே உள்ள தொலைபேசி உரையாடலும் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஆய்வுக்குப்பின் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சோதனை மூலம் ஏற்கனவே உள்ள பதிவில் இருப்பது, நிர்மலாதேவியின் குரல் தான் என்று உறுதி செய்யப்பட்டால், அது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரல் சோதனை எடுப்பது ஏன்? 

ஒரு வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முக்கிய சாட்சியாக ஒருவரது குரல் இருக்கும் பட்சத்தில், குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஏனெனில் உண்மையிலேயே அது அவருடைய குரல் தானா? அல்லது போலியான குரலா? என்பதை உறுதி செய்வதற்காக.

இதுதொடர்பாக நீதிமன்றம் அனுமதி வழங்கினால் மட்டுமே குரல் மாதிரி சோதனை செய்யமுடியும். காவல்துறைக்கு நேடியாக அந்த அதிகாரம் இல்லை.

ஒருவரைப்போல மிமிக்ரி வேண்டுமானால் செய்ய முடியும், ஆனால் குரலின் ஒலி அளவு என்பது ஒரே சீராக இருக்காது. இது குரல் பரிசோதனையின் மூலம் கண்டயறிப்படும்.

குரல் மாதிரி சோதனை தமிழகத்திலேயே சென்னையில் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குரல் மாதிரி உறுதி செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com