“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி

“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி
“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி
Published on

மரண பயத்தை ஏற்படுத்தி பேராசிரியர் நிர்மலா தேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பேராசிரியர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும்தான் காரணம் என பேராசிரியர் நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக மூவரும் சிறையில் உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரிடமும் ரகசிய அறையில் விசாரணை நடத்த வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் திறந்த வெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். அவர்களை தொடர்ந்து திறந்த வெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மலா தேவியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி, மொத்தம் உள்ள 145 சாட்சியங்களில் 2 முதல் 32 சாட்சியங்களை மூடிய நீதிமன்றத்தில்‌ விசாரிக்கவும், பிற அனைத்து சாட்சிகளையும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் முருகன், மரண பயத்தை ஏற்படுத்தி நிர்மலா தேவியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தனக்கும், தனது குடும்பத்தி‌ற்கும் நீதிமன்றம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல என ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி தெரிவித்தார்.

இதனிடையே, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்‌ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை பத்திரிகையில் வெளியிடுவது ஏன்? என்று முரசொலி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழில் வெளியான செய்தியில், வழக்கை வெளிப்படையாக நடத்த தடைகோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர், பேராசிரியை நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை பத்திரிகையில் வெளியிடுவது ஏன் என வினவப்பட்டுள்ளது. ஒரே ஒரு தமிழ் நாளேட்டில் மட்டும் மிகவும் விரிவாக வெளியிடுவதன் மர்மம் என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும், பிரச்னையை திசை திருப்புவதாகவும் இருக்கிறது என்றுதானே கேட்கத்தோன்றும் என்றும் முரசொலி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com