சென்னையில் அறை வாடகை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நண்பனை கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்த ராஜீவ் யாதவ் என்பவர் சென்னையில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் சக நண்பர்களான லட்சுமி யாதவ், அமர்நாத், விக்கி குமார், சூரஜ்குமார் ஆகியோர் பாண்டிபஜாரில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் உரிமையாளர் நிஜாமுதீன் வந்த போது ராஜீவ் யாதவ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜீவ் யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தியதில், ராஜீவ் யாதவ் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார். அமர்நாத், விக்கி குமார், சரஜ்குமார் ஆகியோர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வீட்டு வாடகையை ராஜீவ் யாதவ் தான் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் வேலைக்கு செல்லாதவர்களுக்கும் ராஜீவ் யாத்வ்விற்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அமர்நாத், விக்கி குமார் ஆகிய இருவரும் வெளியில் இருந்து நண்பர்களான மதன்குமார், ராகுல் குமார் ஆகியோரை அழைத்து வந்தனர். இதனை ராஜீவ் யாதவ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அமர்நாத், விக்கி குமார், ராகுல் குமார், மதன் குமார் ஆகியோர் சேர்ந்து ராஜீவ் யாதவ்வை அடித்து உதைத்து கத்தியால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக அதே அறையில் தங்கி உள்ள லட்சுமி யாதவ், அவரது சகோதர் சரஜ்குமார் ஆகியோரிடம் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பி ஓடிய அமர்நாத், விக்கி குமார், ராகுல் குமார், மதன் குமார் ஆகியோரை பாண்டி பஜார் போலீசார் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தேடி வருகின்றனர். செல்போன் டவர் சிக்னலை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.