புதுசத்திரம் அருகே எல்லை பிரச்னையால், பாலம் கட்டக் கூடாது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளதால் போக்குவரத்திற்கு வழியின்றி தவிப்பதாக அங்குள்ள மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளி அருகாமையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கல்யாணி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை பிரியும் இடத்தில் மழை காலங்களில் அதிகளவு தண்ணீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் மழைநீர் செல்ல மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புதியதாக தரைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து டெண்டர் விடப்பட்டு தரைப்பாலம் அமைக்க பணிகள் துவங்கியது. இதனையொட்டி கல்யாணி சாலையில் 2 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகள் பாலம் அமைப்பது தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் வருவதாகவும் எனவே தங்கள் பகுதிக்குள் மாநில நெடுஞ்சாலை துறை பாலம் கட்டக் கூடாது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப் பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டு 2 சக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள், கோழிப்பண்ணைகளுக்கு மூலப்பொருட்கள் மற்றும் முட்டைகளை எடுத்து செல்லும் பணி முடங்கியுள்ளது. இதனால் கல்யாணி, நொச்சிபட்டி, அம்மாபாளையம் புதூர், நாட்டமங்கலம், காட்டூர், வையப்பமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.