நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரி வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை கொண்டும் சென்னைக்கு மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகளை கொண்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தனியார் தண்ணீர் லாரி சங்கத்தின் மூலம் ஏராளமான பொதுமக்களுக்கு பல கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தண்ணீர் எடுக்க இடம் இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை முதல் நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அரசு தங்களுக்கு போதிய பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த பிரச்னையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு உறுதியளித்ததால் நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது