தேனி மக்களவை உறுப்பினர் என ஓ.பி.எஸ் மகனை குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி குச்சனூர் பகுதியிலுள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி கோயிலில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பி்ட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து குறிப்பிட்ட கல்வெட்டு மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.
தன் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைத்ததற்கு ரவீந்திரநாத் குமாரும் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்ட ரவீந்திரநாத் குமார், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ரவீந்திரநாத் குமார் அளித்த புகாரின் பேரில், தேனி சின்னமனூர் காவல் நிலையத்தில் முன்னாள் காவலரும், கோவில் நிர்வாகியுமான வேல்முருகன் மீது நம்பிக்கை மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.