பெரம்பலூரில் அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் 126 மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவச உணவு வழங்க தனியார் உணவகம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு அஸ்வின்ஸ் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் உணவகம் அரசுப் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் மேற்படிப்பு கனவை, நனவாக்க உதவும் வகையில் சூப்பர் 30 என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 126 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு NEET, AIMS, JEE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
சூப்பர் 30ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவசமாக அந்த உணவகம் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
“சூப்பர் 30” என்றால் என்ன?
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூரின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தரேஷ் அகமது. இவர் ஆட்சியராக இருந்த காலக் கட்டத்தில், ஏழை மாணவர்கள் மேல்படிப்பை தொடர உதவியாக இலவச பயிற்சி மையத்தை அரசுப் பள்ளியில் தொடங்கினார்.
இந்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பல மாணவர்கள் பயன்பெற்றனர். பலர் மருத்துவம், பொறியியல் உட்பட பல துறைகளில் தங்கள் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இங்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்ற ஆலோசனைகள், தன்னம்பிக்கை உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவதன் மூலம் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சமும், குழப்பமும் நீங்கி தெளிவான சிந்தனையுடன் உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூப்பர் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நன்கு தகுதிப் பெற்ற அரசு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குகின்றனர். அத்துடன் விருப்பமுள்ள ஆசிரியர்களும் இதில் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு பயிற்சி எடுக்க வரும் மாணவர்களுக்கு, முதலில் தகுதித்தேர்வு வைக்கப்பட்ட அவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றார் போல் பயிற்சி வகுப்புகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.