கோவில்பட்டி: வீட்டின் நடுவில் அமர்ந்து பெண்களிடம் கடனை கேட்கும் தனியார் நிதி நிறுவனங்கள்

கோவில்பட்டி: வீட்டின் நடுவில் அமர்ந்து பெண்களிடம் கடனை கேட்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
கோவில்பட்டி: வீட்டின் நடுவில் அமர்ந்து பெண்களிடம் கடனை கேட்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தும்படி, நுண்கடன் வழங்கு நிதி நிறுவனங்கள் முகவர்கள் வீட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு கடன் தவணை தொகையை செலுத்த நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகளிர் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டும், தனிநபர் வருமானத்தை பெருக்கும் வகையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கள் மூலமாக சேமிப்பு, நலத்திட்டப் பணிகள் ஆகியவை மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கிய அம்சங்களாக இருந்தன. இக்குழுக்களின் சேமிப்புகளை கருத்தில் கொண்டு வங்கிகள் அவர்களுக்கு கடன் கொடுக்க தொடங்கின. இக்கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்துவதை அறிந்த வங்கிகள், மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன. இது தவிர தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்கத் தொடங்கின. தினசரி, வாரம், மாதம் என கடன் வசூலிப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், கடன்தொகை முழுவதும் செலுத்தப்பட்டவுடன் மீண்டும் அடுத்தக் கடனை கொடுக்கத் தொடங்கின.

இதையடுத்து கடன் வாங்குவதற்காக பெண்கள் குழுக்களாக இணையத் தொடங்கினர். அதாவது 10 அல்லது 15 பெண்கள் இணைந்து கடன் கேட்டால், அவர்களை குழுவாக அங்கீகரித்து கடன் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் தீப்பெட்டி தொழில் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் பெண்கள் கடன் பெற்று தங்களது தவணை தொகைகளை செலுத்தி வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி ஆலைகள் இயங்கவில்லை என்பதால் பெண்களால் கடன் தவணை தொகை கட்ட முடியமால் தவித்து வருகின்றனர்.

ஆனால் பெண்களில் சூழ்நிலையை புரிந்து கொள்ளமால் தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் முகவர்கள் தினமும் கடன் தவணைத்தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் செயல்படமால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் தவணைத்தொகையை கேட்டு நெருக்கடி தரப்படுவதால் பெண்கள் செய்வதறியமால் பரிதவித்து வருகின்றனர்.

சில தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை சேர்ந்த முகவர்கள் சமீபத்தில் அரசு வழங்கிய ரூ 2000 நிவாரண தொகையை கூட பறித்து சென்றுள்ள அவல நிலையும் நடந்தேறியுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பெண்களை வீட்டு சிறை வைத்து கடன் தொகையை கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடன் தவணை தொகை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனவேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர் மகளிர் குழு பெண்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com