நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மனப்பாங்கான பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இன்று திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்குக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள், மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மூன்று பேரைப் பத்திரமாக மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரரை கைதுசெய்ய வலியுறுத்தி இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.