சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு சிகிச்சை அவசியமா என சிறைத்துறை பரிசீலிக்கலாம்- உயர்நீதிமன்றம்

சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு சிகிச்சை அவசியமா என சிறைத்துறை பரிசீலிக்கலாம்- உயர்நீதிமன்றம்
சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு சிகிச்சை அவசியமா என சிறைத்துறை பரிசீலிக்கலாம்- உயர்நீதிமன்றம்
Published on

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு சிறப்பு சிகிச்சை அவசியம் என அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளியொன்றில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஜூன் 26ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு கண்பார்வை, இதயநோய், நீரழிவு உள்ளிட்ட பாதிப்பு இருப்பதால், தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடக்கோரி  சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறைத்துறை தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு அவ்வப்போது உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், போதிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.

சிவசங்கர் பாபா தரப்பில் ‘கண் தொடர்பான பிரச்னைகளும், நெஞ்சுவலியும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கண்ணில் அவர் முழுமையாக பார்வை இழந்துவிட்டார். ஆகவே தனியார் மருத்துவமனையின் சிகிச்சை அவசியம்’ எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை எனக் கருதினால் அவர்களே வேறு இடத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன், சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், அதை சிறைத்துறை பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com