செய்தியாளர்: சிந்து
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த அக்கட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர்ச்சியாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 18) கோவை வருகிறார். வாகன பேரணியில் பங்கேற்கும் அவர், பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
மேடைப் பேச்சில் திமுகவை பகிரங்கமாக விமர்சிக்கும் பிரதமர், கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவை கையாளும் விதம் வேறு மாதிரியாக உள்ளது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகிறார். அதிமுகவின் ஆதிக்கம் கொண்ட கொங்கு மண்டலத்தில் பாஜகவை பலப்படுத்தவே இத்தகைய போக்கை பிரதமர் கையாளுகிறார் என தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே பாஜகவின் சரஸ்வதி, வானதி சீனிவாசன் ஆகியோர் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். இந்த சூழலில் அங்கு தங்கள் கட்சியை மேலும் வலுப்படுத்தவே பாஜக களப்பணியாற்றி வருகிறது. முதல் வியூகமாக கடந்த பிப்ரவரி மாதம், 14 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போது, அதிமுகவில் தங்களை வழிநடத்த போதிய தலைமை இல்லை என குறிப்பிட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ’என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா கொங்கு மண்டல பகுதியான பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பிரதமரும் பங்கேற்று உரையாற்றினார்.
இப்படியான யுக்திகளை கொண்டு அதிமுகவுக்கு மாற்றுக் கட்சியாக கொங்கு மண்டலத்தில் உருவெடுக்க நினைக்கும் பாஜக, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்குப் பிறகு பிரதமரை முன்னிறுத்தி கொங்கு மக்களின் வாக்குகளை பெற நினைக்கிறது என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். எது எப்படி இருந்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகே பாஜகவின் வியூகம் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்ததா என்பது புலப்படும்.