ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என புரோகிதர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக புண்ணியத் திருத்தலங்களில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலும் ஒன்று. பலவித தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலமாகவும் விளங்குகிறது. ராமேஸ்வரம் கோயிலில் சாதாரண நாட்களை விட அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர் ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இந்த நிலையில் வரும் 20-ஆம் தேதி ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதற்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலுக்கு வெளியூர் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் யாரும் வரவேண்டாம் எனவும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் உத்தரவுக்கு இனங்க புரோகிதர்கள் யாரும் முன்னோர்களுக்கு காரியங்கள் செய்வதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் புரோகிதர்கள் சங்கம் அறிவித்துள்ளது.