இடைத்தேர்தல் முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள், அவற்றின் முடிவுகள் குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அப்போது, ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டதுதான் ஈரோடு கிழக்கு தொகுதி. 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 98-ஆவது தொகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை மூன்று முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேமுதிக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, 2011- ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தலில், தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார், 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவர், 58 ஆயிரத்து 522 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த திமுகவின் முத்துசாமியை, 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவர், 57 ஆயிரத்து 85 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த திமுகவைச் சேர்ந்த சந்திரகுமாரை, 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, 67 ஆயிரத்து 300 வாக்குகள்பெற்று வெற்றிபெற்றார். 58 ஆயிரத்து 396 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜாவை 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவு காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வெற்றிபெற்ற கட்சிகள்
2021 - காங்கிரஸ்
2016 - அதிமுக
2011 - தேமுதிக
முந்தைய தேர்தல்கள்
2011-ஆம் ஆண்டு
வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு %
சந்திரகுமார் தேமுதிக 69,166 50.83
முத்துசாமி திமுக 58,522 43.01
ராஜேஷ்குமார் பாஜக 3,244 2.38
மின்னல் சுரேஷ் சுயேச்சை 2,439 1.79
2016-ஆம் ஆண்டு
வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு %
தென்னரசு அதிமுக 64,879 43.83
சந்திரகுமார் திமுக 57,085 38.57
பொன்சேர்மன் தேமுதிக 6,776 4.58
ராஜேஷ்குமார் பாஜக 5,549 3.75
2021-ஆம் ஆண்டு
வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு %
திருமகன் ஈவெரா காங்கிரஸ் 67,300 44.27
யுவராஜா தமாகா 58,396 38.41
கோமதி நாம் தமிழர் 11,629 7.65
ராஜாகுமார் மநீம 10,005 6.58