சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொடி ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "இந்த ஏழு ஆண்டுகள் எப்படிக் கடந்தது என்பதே தெரியவில்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல; சோகத்தில் வந்தவன். இத்தனை ஆண்டுகளாக மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று வந்த கோபம் அது. என்னிடம் பலரும், எனது கட்சியினரும் கூட ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் ஏன் சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று கேட்கிறார்கள்.
இங்கு முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? முழுநேர அரசியல்வாதி யாரும் இல்லை. முழு நேரக் கணவரும் இல்லை, முழுநேர மனைவியும் இல்லை, முழுநேர பிள்ளையும் இல்லை. எனக்கு சினிமா மூலமாக எனக்கு (மக்கள்) அனைத்தையும் கொடுத்து உள்ளீர்கள். உங்கள் அன்புக்குக் கைமாறு செய்யவேண்டும் என்று வந்தேன். இதனைக் கேட்டதும் திமிராக பேசுகிறேன் என்று சொல்வார்கள். இந்த திமிரு தந்தை பெரியாரிடம் இருந்து வந்தது. நான் திருடிய பணத்தில் கட்சி நடத்தவில்லை. என்னுடைய சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறேன்.
நான் கோவை தெற்கு தொகுதியில் 1,728 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகச் சொல்கிறார்கள். அங்கு நான் தோற்கவில்லை. ஜனநாயகம் தோல்வியடைந்தது. ஓட்டுக்குப் பணம் வாங்கிவிட்டு வாக்கு செலுத்தும் வரையில் இந்த நிலைதான் ஏற்படும். அதற்குக் கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணம்.
மக்களிடம் இருந்து திருடுவதற்கு நான் வரவில்லை. என்னுடைய அரசியல் ஆரம்பித்து விட்டது. அழுத்தமாகப் பயணித்துக் கொண்டே இருப்பேன். சக அரசியல்வாதி என்பவர்கள், அரசியல்வாதிகள் இல்லை வியாபாரிகள்.
என்னுடைய எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காகக் கொடுக்கிறேன். இந்த கொள்ளை கூட்டத்தை மாற்றுவதற்காக வந்தவர்கள் நாங்கள். முதலில் தேசம், இரண்டாவது தமிழ்நாடு, மூன்றாவது மொழி.
தமிழகத்தில் விவசாயத்திற்கு மாநில அரசு செய்ததை ஒன்றிய அரசு செய்யவில்லை. டெல்லியில் ஆணி படுக்கை போட்டு உள்ளார்கள்.
இந்தியாவில் வருமானம் எந்த மாநிலத்தில் இருந்து அதிகமாக வருகிறது என்றால் தமிழகம் தான். நாம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 29 பைசா வருகிறது. தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு தர மறுக்கிறது. தமிழகத்தை விட பீகார், உத்திர பிரதேசம் மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய பாஜக அரசு வழங்குகிறது.
தேர்தலில் 5 ஆயிரம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு ஒட்டு போடுகிறார்கள். அதனால் 50 லட்சம் இழப்பீடு ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. நான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது இல்லை. நான் இறந்த பிறகு இன்சூரன்ஸில் பணம் போட்டது போல பணம் வந்து சேரும். அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னிடம் யாரும் இல்லை. இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது. நேர்மையுடன் என்னுடைய பயணம் தொடங்கும்" என்றார்.