நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி தனது உரையை 2 நிமிடங்களிலேயே நிறைவு செய்தார் ஆளுநர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இது குறித்து பேசுகையில் “வருகின்ற 19 ஆம் தேதி மாநில நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். 20 ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வேளாண் வரவு, செலவு திட்டத்தினை அறிமுகம் செய்வார்கள். இதனை தொடர்ந்து 21 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்று 22 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெறும்” என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் உரையை படிக்காமல் அவையில் இருந்து வெளியேறியதை குறித்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஆளுநரின் சொந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பேரவை விதி 176 (1) இன் படி, சட்டமன்ற கூட்டம் தொடங்கப்படுதற்கு முன் தமிழ்தாய் வாழ்த்தும், அதனை தொடர்ந்து ஆளுநரின் உரை, இதன் பிறகுதான் தேசிய கீதம் இயற்றப்படும். மேலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டுதான் ஆளுநர் அழைத்துவரப்பட்டார்.
சட்டபேரவையில் முதல் நாளில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்பது மரபு. சமீபகாலங்களில் ஆளுநர்களின் இத்தகைய நிலைப்பாட்டினால்தான் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை.
உதாரணமாக கூறினால், தெலங்கானாவில் சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்தபோது ஆளுநாராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை அழைக்கவே இல்லை.
ஆனால் தமிழ்நாட்டினை பொறுத்தவரை மாண்பையும் , சட்டத்தினையும் நாம் மதிப்பவர்கள் என்பதால், எவ்வளவோ எதிர்கருத்து, கொள்கை ரீதியான வேறுபாடு, சித்தாந்தங்களை கொண்டிருந்தாலும் ஆளுநரை அழைத்தோம். என்ன இருந்தாலும் ஆளுநரை அழைக்காமல் இருக்க முடியாது என்பதால், இவை அனைத்தையும் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்திய அரசியல் அமைப்பில் கூறி இருப்பதுபோலதான் பேரவையில் கடைபிடிக்கப்படுகிறது.
முன்னதாக எழுதி கொடுக்கும் உரையை ஆளுநரிடம் காண்பித்து அதற்கு அவரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஆளுநரின் உரை அச்சிடப்படும். அதைதான் ஆளுநரும் வாசிக்கிறார். மேலும் உண்மைக்கு புறம்பாகவோ அல்லது எந்த அரசினையும் குறைக்கூறியோ ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட உரையில் எதுவும் எழுதப்படவில்லை.
இப்படி இருக்க, பாதியை மட்டும் படித்து விட்டு நிறுத்திவிட்டார் ஆளுநர். அவையின் மாண்பு கருதியாவது கூட்டம் முடியும் வரை அவர் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டினை விட தேசப்பற்று மிகுந்தவர்களோ, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களோ வேறு எங்கு உள்ளனர்? பேரவை விதியின்படிதான் சட்டமன்றம் நடத்தப்படுகிறது. ஆகவே, இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும், மரபுக்கு எதிராகவும் ஆளுநர் நடந்து அவருடைய விருப்பத்தினை தெரிவிப்பது முறையும் அல்ல, நாகரீகமும் அல்ல” என்று தெரிவித்தார்.