கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு குடியரசுத் தலைவர், “கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமார் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். தொழில்முனைவோரும், சமூக ஆர்வலருமான அவர், உலக அளவில் அரசியலிலும், வணிகத்திலும் பெயர் பெற்றுவிட்டார். தமிழக மக்கள் மீது அவர் கொண்ட அன்பு போற்றுதலுக்குரியது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு என இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு” என குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். திரு.வசந்த குமார் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.