குடியரசுத் தலைவர் சென்னை வருகையால் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் 12.45 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் தலைமைச் செயலகம், தங்கி இருக்கும் ராஜ்பவன் ஆகிய இடங்களில் மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே உச்சபட்ச பாதுகாப்புக்குரியவர் குடியரசுத் தலைவர். இவருக்கென்று தனியாக பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கிறது. அதனால் இன்று மதியம் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் வந்ததும் அவர் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்தை முழுவதுமாக போலீசார் நிறுத்தினர்.
மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை, கிண்டி கத்திப்பாரா, சைதாப்பேட்டை சின்னமலை ஹால்டா சந்திப்பு, சைதாப்பேட்டை அண்ணாசாலை, கிண்டி ராஜ்பவன், சர்தார்பட்டேல் சாலை என குடியரசுத் தலைவர் செல்லும் சாலை மட்டுமல்லாமல், இருபுறங்களிலும் போக்குவரத்தை அரை மணிநேரம் சென்னை போலீசார் நிறுத்தினர். இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். வாகனங்களை சாலையிலேயே கடும் வெயிலில் போலீசார் நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சில இடங்களில் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
மதிய வேளையில் குடியரசுத் தலைவர் வந்ததால் போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருக்க வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறுத்தப்பட்ட போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்தியபோது அண்ணாசாலை, கிண்டி, ராஜ்பவன், ஜிஎஸ்டி சாலை, பட்ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் ஒழுங்கு படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
இந்நிலையில் மாலை 4.45 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு கிண்டி காந்தி மண்டபம் மேம்பாலம், அடையாறு மத்திய கைலாஷ், துர்காபாய் தேஷ்முக் சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை வழியாக தலைமைச் செயலகம் சென்றார். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்தை தடுப்புகள் மூலம் போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைத்தனர். அதேபோல், சட்டப்பேரவையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு குடியரசுத் தலைவர் ராஜ்பனுக்கு மீண்டும் செல்லும்போதும் அரைமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் குடியரசுத் தலைவர் செல்லும் சாலையில் மட்டும் இன்று ஒரே நாளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.