தமிழகத்திற்குத் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசு, மற்றும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் தே.மு.தி.க சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய மாநில அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. யானை கட்டி போர் அடித்து வாழ்ந்த விவசாயிகள் தற்போது உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம்.
அதிமுக - பாஜக கூட்டணி கூட்டணியிலிருந்து பிரிந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்கள்தான் முக்கிய காரணம். இது நிரந்தரமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல முடிவை தே.மு.தி.க எடுக்கும். இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார். உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.
தமிழகப் பகுதிகளான கச்சத்தீவு, குடகு உள்ளிட்ட தமிழகப் பகுதிகளை அரசியல் ஆதாயத்திற்காக. விட்டுக் கொடுத்ததால்தான் இன்று பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலைத்தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலைச் செய்வது கிடையாது.
டெல்டாகாரன் எனக் கூறிக்கொள்ளும் விவசாயி டெல்டாவில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்து வைத்தால்தான் அவர் டெல்டாகாரர். வெறும் வார்த்தைகளால் கூறக்கூடாது. ஏனென்றால் அதை நம்பி கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நதிநீர் பிரச்னை தீர வேண்டும் என்றால் நதிகள் இணைப்பு மட்டும்தான் ஒரே தீர்வு. இந்தியா முழுவதையும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கும் போது தேசிய நதிகளை இணைப்பது மட்டும்தான் இதற்கு நிரந்தர தீர்வு. விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான், அவர்களுக்குத் தேவை நிரந்தர தீர்வு. எப்போது அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம்? எத்தனை வருடங்கள் போராடப் போகிறோம்? இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதே பாலைவனம் என்றால் வருங்கால சந்ததிகள் என்ன செய்வது? தமிழகத்தின் ஆணிவேரை விவசாயம்தான். இதற்கான நடவடிக்கையை பிரதமர் எடுக்க வேண்டும். வருகின்ற தண்ணீரில் சேமிப்பது மாநில முதல்வர்களின் கடமை. டெல்டாவில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை இல்லை. ஒரு ஏரி வாய்க்கால் கூட தூர்வார வில்லை " என்று பேசியுள்ளார்.