செய்தியாளர் - சுபாஷ்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விஜய பிரபாகரனின் அம்மாவுமான பிரேமலதா விஜயகாந்த், அவனியாபுரம் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் இருந்து நான் பேசுகிறேன். கேப்டன் உடன் நான் பல முறை இங்கு வந்துள்ளேன். உங்கள் வீட்டு பெண்ணாக உங்கள் சகோதரியாக உங்களிடத்தில் வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். மதுரை வரும்போதெல்லாம் கேப்டனுடன்தான் வந்துள்ளேன். கேப்டன் இல்லாமல் தற்போது வந்து உங்களை சந்திக்கும் பொழுது மனமெல்லாம் துக்கம் அடைக்கிறது.
எங்களுடைய வாழ்க்கை எல்லாமே இந்த விருதுநகர் தொகுதிதான். எங்களுக்கு பாரம்பரியம் தெரியும், உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேப்டனின் பிள்ளையை (விஜய பிரபாகரனை) மகத்தான முறையில் வெற்றி பெற நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கணவன் இல்லை என்றால் அந்த பெண் எவ்வளவு பிரச்னைகளை சமாளிப்பார் என்று தாய்மார்களுக்கு தெரியும். சமூகத்தில் எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்... கேப்டன் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார். அவர் விட்டுச்சென்ற பணிகளை உங்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 32 வயதுடைய என் மகனை உங்களுக்காக போட்டியிட வைத்துள்ளேன். விஜய் பிரபாகரன் இனிமேல் எனது மகன் மட்டும் இல்லை. இந்த விருதுநகர் தொகுதியில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் மகன்தான்.
விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் 3 என்ற மூன்று தெய்வங்களின் ஆதரவோடு விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் விருதாச்சலம் எப்படி முதல் வெற்றி பெற்றாரோ, அதே போல் விஜய பிரபாகரனுக்கு இந்த விருதுநகர் தொகுதி வெற்றியை தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்துடன்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற விஜய பிரபாகரன் நிச்சயம் பாடுபடுவார் என உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.