செய்தியாளர்: ஆர்.முருகேசன்
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தச் சூழலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்... “தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி 1 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நன்றி. விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார். மொத்தம் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில், விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியுற்றார். 13 வது சுற்றுக்குப் பிறகு வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி நடந்துள்ளது. 13க்கு பிறகு 18 வது சுற்றுக்கு சென்றுவிட்டனர்.
விருதுநகரில் மட்டும்தான் தபால் வாக்குகள் எண்ணும் பணி நள்ளிரவில் நடைபெற்றது. விஜய பிரபாகரன் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரை நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.
‘மேலிடத்தில் இருந்து அதிக அழுத்தம் வருகிறது; என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன.
40 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40க்கு 40 வெற்றி பெற்றதாக அறிவித்தது எப்படி?
நீதிமன்றத்திற்கு சென்றால் உடனடியாக நல்ல தீர்வு வருமா? எனவே தேர்தல் ஆணையம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி முன்னால் நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அதில், என்ன முடிவு வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
எதிர்நீச்சல் போட்டுத்தான் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி கேப்டன் வளர்ந்து வந்தார். அவரது மகன், விஜய பிரபாகரன் முதன் முதலில் இப்போது தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். அவரை வெற்றிபெற விடாமல் செய்துள்ளனர்.
சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் விஜய பிரபாகரன். எத்தனையோ வெற்றிகளையும் தோல்விகளையும் தேமுதிக பார்த்துள்ளது. தொண்டர்களின் உறுதுணையோடு மீண்டும் தேமுதிக-வை வெற்றி நடைபோட வைப்போம். இது தேர்தல் திருவிழா அல்ல. ஆட்சியாளர்களின் திருவிழா” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் இன்று காலை அழைப்பு விடுத்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. நான் எதுவும் சொல்ல முடியாது. அதிமுகவில் அனைவரும் சேர்ந்தால் அது வரவேற்கக் கூடியது” என்றார்.
தொடர்ந்து மறுவாக்கு நடத்தப்படவேண்டும் என்று பிரேமலதா தேர்தல் ஆணையத்துக்கு மனுவும் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா நீதிமன்றத்தை நாட, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கிடையே விஜய பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பிரேமலதாவின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார்.