கரை உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரை சீரமைப்புப் பணிக்கான ஆரம்ப கட்ட வேலைகள் துவக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து ஆக்ஸட் 15ம் தேதி முதல், நெல் சாகுபடிக்குக்காக கீழ்பவானி வாய்க்காலில் 1000 கன்அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் திறந்தவிடப்பட்ட நீரானது ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 124 மைல் பயணித்து கடைமடை வரை பாய்ந்தோடியது. இந்நிலையில் 55-வது மைல் நசியனூர் அடுத்த மலையப்பாளையம் வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறி அருகில் இருந்த மலையப்பாளையம், கரையன்காடு, வரவன் காடு ஆகிய குடியிருப்புக்குள் நீர் பாய்ந்தோடத் தொடங்கியது.
வெள்ளநீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஈரோடு தறிப்பட்டறை குடோனில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நிவாரணப்பொருள்கள் உணவு, உடைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. வாய்க்காலில் இருந்து தண்ணீர் தொடர்நது வந்து கொண்டிருந்ததால் நீரோட்டத்தை கட்டுப்படுத்த பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. வாய்காலில் செல்லும் தண்ணீர் வேகத்தை குறைக்க உக்கரம், கூகலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கிளை வாய்கால் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 45 வது மைலில் உள்ள கவுந்தபாபடி நல்லாம்பட்டி வாய்க்கால் 6 மதகுகள் மூலம் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதின் காரணமாக வாய்காலில் தண்ணீர் முழுவதையும் கட்டுப்படுத்தினர். தற்போது தண்ணீர் நின்று போன நிலையில் காய்வாய் சீரமைப்பு பணிக்கான ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கட்டுமான பணி நடைபெறும் வாய்க்கால் பகுதியில் தடுப்புகள் அமைத்து நீரோட்டத்தை திசைமாற்றி திருப்பி விட்டனர். கரை உடைப்பு காரணமாக சேதமடைந்த 60 மீட்டர் வாய்க்கரையில் ஜேசிபி. பொக்லைன் இயந்திரம் மூலம் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதே நேரத்தில் கால்வாயில் அடுக்குவதற்கு மணல் மூட்டைகள் தயாராகி வருகிறது. வாய்க்கால் உடைப்பு பகுதியை பார்ப்பதற்கு மக்கள் அதிகம் கூடுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளதால் 10 நாள்களில் பணி நிறைவடைந்து கால்வாய் பயன்பாட்டிற்கு வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.