சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் பவித்ராவை காஞ்சிபுரம் அழைத்துச் சென்று மோகன்ராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சென்னையில் இருவரும் 5 மாதமாக வசித்து வந்துள்ளனர். தன்னுடைய சகோதரிக்குக் குழந்தை பிறந்துள்ளது பார்த்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சொந்த ஊருக்குச் சென்ற மோகன்ராஜ் பவித்ராவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். 3 மாத கர்ப்பமாக இருந்த பவித்ரா, வேலாக்கவுண்டனூரில் உள்ள தனது கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாராதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்காமல் வீட்டை விட்டு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை 22-ம் தேதி புகார் கொடுத்துள்ளார். ஒரு மாதமாக விசாரணை நடத்தியும் மோகன்ராஜை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிகிறது.
தனது காதல் கணவரைக் கண்டுபிடித்துச் சேர்த்து வைக்க கோரி, கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தைத் துவக்கினார். அதனால், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறிய மோகன்ராஜின் குடும்பத்தினர் இதுவரை வீட்டிற்கு வராமல் உள்ளனர்.
இந்தநிலையில் 65-வது நாளாகக் கர்ப்பிணிப் பெண் கணவரின் வீட்டின் முன்பு குடியேறி தனது கணவரைச் சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.