கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்ற இறுதிக்கட்டத்தில் இரத்தம் கொடுத்து உதவிய தேனி காவலர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்
தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.இதனை தொடர்ந்து அவருக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவரை ஆபத்தான கட்டத்தில் இருந்து மீட்க ஓ பாசிடிவ் ரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்தச் சமயம் ரத்த வங்கியிலும், போதுமான ரத்தம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தகவலானது ஆயுதப்படை காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, இரத்ததானம் கொடுப்பவர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேனி ஆயுதப்படை பிரிவு காவலர்களான வினோத்குமார், விக்னேஷ், ராஜேஷ்கண்ணன் ஆகிய மூன்று பேரும் உடனடியாக தேனி அரசு மருத்துவகல்லூரிக்குச் சென்று ரத்ததானம் வழங்கினார்கள். இதனையடுத்து பெண்ணுக்கு இரத்தம் செலுத்தப்பட்டு, மருத்துவர்கள் பெண்ணின் உடல் நிலையைத் தேற்றினர். சரியான நேரத்திற்கு ரத்தம் கொடுத்த காவலர்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ரத்தம் கொடுத்த காவலர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.