வெயிலில் கொதிக்கப்போகும் சென்னை... பிரதீப் ஜான் கணிப்பு! வட மாநிலங்களில் என்ன நிலவரம்?
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வெப்பச்சலனம் மற்றும் ரிமல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நம்மிடையே பேசினார். அவர் கூறுகையில், “சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மற்ற மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தாது” என்றார்.
தமிழ்நாடு மட்டுமன்றி வட, வட கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலும் வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக அசாம், ஹிமாச்சல், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தானில் அதிக வெயில் அடித்துவருகிறது. அதிலும் ராஜஸ்தானில் 50 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பம் இருந்துள்ளது. இந்தியாவில் 2009 முதல் இன்றுவரை பதிவான அதிகபட்ச வெப்பம் இதுதான் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசங்களில் கடந்த சனிக்கிழமை மட்டும் 45 அல்லது அதற்கும் அதிகமாக வெப்பம் சராசரியாக பதிவாகியுள்ளது தெரிகிறது.
ராஜஸ்தானில் 48.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானதால், அங்கு வெப்பத்துக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பம் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், சட்டிஸ்கர், மகாராஷ்ட்ராவில் மே 29 வரை தொடருமென கூறப்பட்டுள்ளது.