தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகப்போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதன்காரணமாக தமிழகத்தில் எந்ததெந்த பகுதிகளில் மழைப் பெய்யும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் விளக்குகிறார்.
“காற்றழுத்த தாழ்வுநிலையானது தற்போது அந்தமான் தீவுகளில்தான் குடிகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசைகளில் நகர்ந்து தமிழகத்தை வந்தடைய இன்னும் 4 நாட்கள் ஆகும். டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தின் வங்கக்கடலில் மையம் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அதுவரை கிழக்கு காற்று வீசுவதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை சென்னை ,திருவள்ளூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை தொடரக்கூடும்.
மேலும் சென்னையை பொறுத்தவரை 4 செ.மீ என மழைப் பதிவாகியுள்ளது. அதேசமயம் நேற்றுபோல மழைப்பொழிவானது இன்று இருக்காது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழையானது பெய்ய கூடும்.
மேலும் கடலோர மாவட்டங்களில் மழைப் பொழிவும் உள்மாவட்டங்களில் குறைந்த அளவு மழைப்பொழிவும் பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் இன்று இரவில் இருந்து நாளை காலை வரை நன்கு மழைப்பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழையின் அளவு: அக்டோபரில் போதுமான அளவு; நவம்பரில் அதிக அளவு நமக்கு கிடைத்துள்ளது.
சராசரி மழையின் அளவு: குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையின் சராசரி மழையின் அளவு என்பது 450 மி.மீ.
இன்றைய நிலையை பொறுத்தவரை 310 மிமீ மழை நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் தேவைப்படும் மழையின் அளவு- என்பது 140 மிமீ. இது டிசம்பர் மாதத்தில் வர வாய்ப்புள்ளது.
இதுவரையான மழைக் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நல்ல மட்டத்தினை அடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. மேலும் டிசம்பர் - ஜனவரி வரை வட கிழக்கு பருவமழை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் வடகிழக்கு பருமழையின் தமிழகத்திற்கான சராசரி அளவை எட்டிவிடுவோம் என்றுதான் எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.