ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றத்தின் 34வது ஆண்டு நிகழ்ச்சியில், பிரபாகரனின் மகள் துவாரகா என்ற பெயரில், மாவீரர் நாள் நிகழ்வில் உரையாற்றியதாக வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ”தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம். நாங்கள் ஒருபோதும் சிங்களத்திற்கு எதிரானவர்கள் அல்ல; ஒரே கோட்டின்கீழ் பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும் இருக்கிறோம். ஆபத்து, நெருக்கடி, சவால்களை கடந்து நான் உங்கள் முன்னே தோன்றியுள்ளேன்.
தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தனித்து நின்று போர் புரிய திராணியற்ற அரசு சிங்கள அரசு உள்ளது. தற்போது பண்பாட்டுச் சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன; சட்டத்தின் ஆட்சி இல்லை. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள்; ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐ.நாவும் நீதியை வழங்கவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைவரிடத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் பேசுபவர், உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகாவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் இது பிரபாகரன் மகள்தான் எனவும், துவாரகா இல்லை எனவும், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ எனவும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் இன்று பேட்டியளித்தார். அவர், ”துவாரகாவை தொடர்ந்து பிரபாகரனும் விரைவில் மக்கள் முன் தோன்றுவார். பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். பிரபாகரனின் புதல்வி தற்போது வந்துள்ளார். துவாரகாவின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது உண்மை. இளவேங்கை இப்போது வந்திருக்கிறது; சினவேங்கை விரைவில் வரும்” எனத் தெரிவித்தார். ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.